Monday, May 31, 2010

பைத்துல்மால் குர்ஆன் மாநாட்டுத் துளிகள் (மூன்றாம் நாள்)

•காலை 9:30 மணி முதல் மாநாட்டு மேடையில் சிறார் சிறுமிகளுக்கான விநாடி-வினா மற்றும் போட்டிகள் நடைபெற்றன.

•பகல் 12:00 - அஸர் தொழுகை முடியும்வரை மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

•அஸர் தொழுகைக்குப் பிறகு சிறுமிகளின் இனிய குரலில் கிராஅத் மற்றும் இஸ்லாமியப் பாடல்களை மேடையில் நடந்தன.

•மாலை 4:30 மணிமுதல் மாநாட்டு நிகழ்வுகளை அதிரை எக்ஸ்ப்ரஸ் மற்றும் அதிரைமீடியா.காம் இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்பு தொடங்கியது.

•அதிரை வரலாற்றிலேயே இதுபோன்ற மாநாட்டுக்காட்சிகளை உலகெங்கும் பரவியுள்ள அதிரைவாசிகள் இணையம் வாயிலாக தெள்ளத்தெளிவாக நேரடியாக ஒலி/ஒளிபரப்பியது இதுவே முதல்முறை என்று மாநாட்டுக்கு வந்திருந்தவர்களும், நேரலையாகக் கண்டு ரசித்தவர்களும் தெரிவித்தார்கள்.

•மாலை 5:00 மணிக்கு வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் நமது அண்மையூர் முத்துப்பேட்டையைச் சார்ந்த சகோதரர்.ஜனாப். அப்துல் ரஹ்மான் M.P., அவர்கள் மேடைக்கு வந்தார்கள்.

•பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், காதர் முஹைதீன் கல்விக்குழுமங்களின் சொத்துக்களை மூன்றாண்டுகளாக நிர்வகிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மாண்புமிகு முன்னாள் நீதிபதி ஜனாப். அப்துல் ஹாதி அவர்களை மாநாட்டுக்குழுவினர் மேடைக்கு அழைத்து கவுரத்தார்கள்.

•மூன்று திசைகளிலும் மாநாட்டு பந்தலில் ஆண்-பெண் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தன.அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுவினரின் கணிப்பின்படி 5000+ பேர் மாநாட்டுப்பந்தலில் அமர்ந்திருந்தனர்.

•ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கைகள் போதாத காரணத்தால் மேலும் 300 ப்ளாஸ்டிக் இருக்கைகள் வரவழைக்கப்பட்டன.

•பெண்கள் பகுதியில் இருக்கைகளுடன் கூடுதலாக தரைவிரிப்பு (பாய்) விரிக்கப்பட்டிருந்தது. மாநாட்டு மேடையிலிருந்து பெண்கள் மதரஸா வரையிலும், கிழக்குப்பக்கம் ஆலடித்தெரு இடைப்பகுதி வரையிலும் மேடை முன்பாக செக்கடிமேடு வரையிலும் பார்வையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. (அல்ஹம்துலில்லாஹ்).

•மஃரிப் தொழுகைக்கு முன்னதாக மூன்றாம்நாள் மாலை நிகழ்வின் தொடக்கமாக பேராசிரியர். அப்துல்காதர் அவர்கள் மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் தேனீ ஒருங்குறி எழுத்து மற்றும் ஆக்கங்களின் சிறப்பை மாநாட்டு மேடையில் எடுத்து இயம்பினார். அதிரைவாசிகள் பலருக்கும் மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் சாதனையை மீண்டும் நினைவுறுத்தியும், ஜூன் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் கணிமையில் சாதனை படைத்தவர்களுக்கு 'உமர்தம்பி' பெயரில் விருதுகள் வழங்கி கவுரவிக்கும்படி தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.

•சிங்கை வானொளி தொகுப்பாளர் சகோ.சதக்கத்துல்லாஹ் அவர்களின் உமர்தம்பி அவர்களைப் பற்றிய புகழாஞ்சலி ஒலிப்பதிவும் மேடையில் ஒலிபரப்பப்பட்டது.

•மாநாட்டு அரங்கில் 3 மடிக்கணினிகளில் (லேப்டாப்) மாநாட்டு நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு, நேரடி ஒலி/ஒளிபரப்பு குறித்த கருத்துக்கள் உடனுக்குடன் பெறப்பட்டு ஒளிபரப்பு தவறுககள் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டன. (அல்ஹம்துலில்லாஹ்)

•மஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பிறகு ஜனாப்.அப்துல் ரஹ்மான் M.P., அவர்கள் மார்க்கமும் அரசியலும் கலந்த எழுச்சிமிகு உரையாற்றி மாநாட்டு பேச்சாளர்களையே அசத்தினார். குர்ஆன் வசனங்களை தேர்ச்சிபெற்ற மவ்லவியைப்போல் மேற்கோள் காட்டிப் பேசியது பார்வையாளர்களுக்கு அவர்மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது என்றால் மிகையில்லை.

•ஜனாப்.அப்துல் ரஹ்மான் M.P அவர்களிடம் நமதூர் வழியாக சென்னைக்குச் சென்று வந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் மீண்டும் இயக்கப்பட சம்பந்தப்பட்ட அரசு இயந்திரங்களுக்கு உரியமுறையில் தெரிவிக்கக் கோரியதை பேரா.அப்துல் காதர் மிகச்சரியான நேரத்தில் எடுத்துரைத்ததை ஏற்றுக்கொண்டதோடு, இன்ஷா அல்லாஹ் விரைவில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என்றதோடு, முத்துப்பேட்டை மற்றும் அதிரை மக்களை நான் தனித்தனியாக பார்க்கவில்லை இருவரின் சார்பில் ஏற்கனவே அதற்கான அமைச்சக அதிகாரிகளை முடுக்கிவிடுவதற்கான நடவடிக்கைகள் செய்துள்ளதாகச் சொன்னார்கள். (ஜஸாகல்லாஹ்)

•பேசி முடிந்ததும் மேடையில் அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் சார்பில் அதிரை உமர்தம்பி அவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் உரிய அங்கீகாரம் வழங்கக்கோரி தமிழக முதலவ்ருக்குத் தெரிவிக்கும்படி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை மணு கொடுக்கப்பட்டது. அதையும் இன்ஷா அல்லாஹ் விரைவில் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.

•நமதூர் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் SSLC தேர்வில் 482 மதிப்பெண்கள் பெற்று அதிரை பள்ளிகளிலேயே முதலிடம் பெற்ற கரையூர் தெருவைச் சேர்ந்த மாணவி R. இந்துமதி மாணவிக்கு நமதூர் மாஜ்தா ஜுவல்லரி சார்பில் பைத்துல்மால் நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப்.O.K.M.சிப்ஹதுல்லாஹ் அவர்கள் தங்க மோதிரம் ஒன்றை மாநாடு மேடையில் வழங்கி சிறப்பித்தார்கள்.

•இஷாத் தொழுகைக்கான இடைவேளைக்குப் பிறகு அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்கள் முனைவர் அப்துல்லாஹ் (முன்னாள் பெரியார்தாசன்) அவர்களிடம் ஈமெயில் மற்றும் பின்னூட்டங்கள் மூலம் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் மேடையில் சொல்லப்பட்டது. நேரம் பற்றாத காரணத்தால் 6-7 கேள்விகளுக்கே பதில் பெறப்பட்டது. எஞ்சியவை மாநாட்டு சிறப்புரையில் இணைத்துக்கொள்ளப்படும் என்றதோடு, முனைவர் அப்துல்லாஹ் அவற்றையும் மறக்காது சுமார் 1:30 மணிநேரம் தனது நகைச்சுவை கலந்த இஸ்லாமியச் சொற்பொழிவாற்றினார்.

•இறுதியாக உரையாற்ற அழைக்கப்பட்ட மெளலவி M.முஹம்மத் மன்சூர் காஷிஃபி (இமாம், மஸ்ஜித் ஆயிஷா, புரசைவாக்கம் - சென்னை) "திருமறை கூறும் அறிவியல் உண்மைகள்" என்ற தலைப்பிலிருந்து விலகி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பேரா.அப்துல் காதர் மற்றும் நமதூர் கல்விநிறுவனம் குறித்து குறைக்கூறிப் பேசியது மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்கும் மாநாட்டுக் குழுவினருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

•மெளலவி M.முஹம்மத் மன்சூர்காஷிஃபி அவர்களின் மேடை நாகரிகமற்றப் பேச்சு வந்திருந்த மாற்றுமதப் பார்வையாளர்கள், உளவுத்துறை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் முகம் சுழிக்கும்படி இருந்தது, நன்கு படித்த மார்க்கமறிந்த மெளலவியின் முதிர்சியின்மையைக் காட்டியதாக பார்வையாளர்கள் தரப்பிலிருந்து அறியப்பட்டது.

•இறுதியாகக் கிடைத்த சொற்ப நேரத்தில் மாநாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற சிறார்களை நள்ளிரவுவரை காத்திருக்க வைத்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று சில பெற்றோர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், இடம் பொருள் ஏவல் அறிந்து நிலைமையை உணர்ந்து மேடையில் பரிசு பெறுவதற்குத் தவறியவர்களுக்கு இன்று பைத்துல்மால் அலுவலகத்தில் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

•பலநிறைகளும், சில குறைகளும் இருந்தாலும் வழக்கம்போல் திருக்குர்ஆன் மாநாடு அதிரைவாசிகளுக்குப் பயனுள்ளதாக அமைந்ததோடு, நமது முக்கிய கோரிக்கைகளான சென்னைக்கு அகல இருப்புப்பாதை மற்றும் உமர்தம்பி அவர்களுக்கு தமிழக அரசின் அங்கீகாரம் ஆகியவற்றை உரியவர்களிடம் கொண்டுசெல்ல அதிரை பைத்துல்மால் மற்றும் அதிரை எக்ஸ்ப்ரஸ் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

•மறக்காமல் மாநாட்டு நிகழ்வுகள், நேரலை ஒளிபரப்பு மற்றும் பொதுவான கருத்துக்களை பின்னூட்டங்களாக இப்பதிவில் தெரிவித்தால் மேலதிக தகவல்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்ளப்படும்.

நன்றி அதிரை எக்ஸ்ப்ரஸ்
Continue Reading...
 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template