Thursday, December 2, 2010

பொது இடத்தில் புகைப்பவர்கள் கவனிப்பார்களா.?

"பேசிவ் ஸ்மோக்கிங்" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தான் புகை பிடிக்காமல் புகைப்பழக்கமுள்ளவர்களுடன் தொடர்புடையதாலேயே மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

நாம் பொதுவாக நம் நண்பர்கள் புகைப் பிடிக்கும் போது அருகில் நிற்போம். மதுபான விடுதிகளிலும் பிற பொது இடங்களிலும் சிகரட் புகையினால் பாதிக்கப்படுபவர்கள் புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல அருகில் இருப்பவர்களும்தான்.

பிரிட்டன் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுத் தகவல்களின் படி குழந்தைகளில் 40 சதவீதத்தினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரில் 30 சதவீதத்தினரும் இம்மாதிரியான பிறரது புகைப்பழக்கத்திற்கு பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்டொன்றிற்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் இருதய நோயால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 379,000, கீழ் மூச்சுக்குழல் நோயால் மரணமடைவர்கள் எண்ணிக்கை 1,65,000, ஆஸ்துமா நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை 36,900, நுரையீரல் புற்று நோயால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை 21,400 என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் நிகழும் மரண விகிதத்தில் பிறரது புகைக்கு மரணமடைபவர்களின் பங்களிப்பு 1% என்று லான்செட் குண்டைத் தூக்கி போட்டுள்ளது.

51 லட்சம் பேர் ஆண்டு முழுதும் உலக அளவில் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர் என்றால் அதில் 6,03,000 பேர் பிறரது புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

2004ஆம் ஆண்டு முதல் 192 நாடுகளில் பல்வேறு தரப்பிலும் மேற்கொள்ளப் பாட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன.

ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 1,65,000 குழந்தைகள் மரணமடைவதாக உலக சுகாதார மையம் கவலை வெளியிட்டுள்ளது.

பெற்றொர்களுக்கு புகைப்பழக்கம் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களின் தன்மை அபாயகரமாக உள்ளது. அதாவது காது தொடர்பான நோய்கள், நிமோனியா, ஆஸ்துமா, பிரான்க்கைட்டீஸ் ஆகிய நோய்கள் தாக்குவது இயல்பாகி வருகிறது என்கிறது லான்செட் புள்ளிவிவரம்.

பிறரது புகைப்பழக்கத்தினால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பாவும் ஆசியாவும்தான் முன்னிலை வகிக்கின்றன.

பிறரது புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் பெண்களே அதிக அளவில் மரணம் அடைவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading...
 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template