Saturday, July 14, 2012

ஆரோக்கியமற்ற அதிரை சமுதாய அரசியலுக்கு அய்டாவின் சமாதான வேண்டுகோள்!!


சமீபத்தில் அதிரை பேரூராட்சித் தலைவருக்கும், அதிரை தமுமுக (மமக) அமைப்பினருக்குமிடையே நிலவி வரும் அரசியல் காழ்ப்புணர்சிகள் வெளிநாடு வாழ்  அதிரையர்களை பெரும் அதிருப்தியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மாட்டுக்கறி என்ற பிரச்சனையை வைத்து முதலில் தமுமுக நிர்வாகி இணையதளத்தில் பேட்டி கொடுத்ததும் அதனை தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் பேட்டிக் கொடுத்ததும் பின்பு மாறி மாறி பேட்டி கொடுத்து வெளிநாட்டு மக்களுக்கு உண்மையை சொல்கிறோம் என்று சளிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.

வீட்டை  விட்டு குடும்பத்தை விட்டு பொருளீட்ட அயல்நாடு வந்த நாம், ஊரில் நம் சகோதரர்களுக்கிடையே அடிக்கடி ஏற்படும் அவசியமற்ற மோதல்களால் பெரும் கவலை அடைந்துள்ளோம்.

தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மோதிக் கொள்வதும்....  மாறி மாறி வசை பாடுவதும், இப்படி பேட்டி கொடுப்பதும் போஸ்டர் ஒட்டுவதும் நமதூர் சமுதாய அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பொழுதுபோக்காக இருக்கலாம் ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பான்மையான நடுநிலையாளர்களுக்கு  எரிச்சலை ஏற்படுத்தும் செயல். 

இருதரப்பினரும் இஸ்லாமியர்கள் என்பதை நினைவில் கொண்டு  அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான், என்பதையும் அவனை அன்றி நம்மால்  எதுவும் செய்துவிட முடியாது என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்வோம்.

இந்நிலையில், நேற்று (13/07/2012) வெள்ளிக் கிழமை மாலை ஜித்தா தமுமுக அமைப்பு நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆம்பூர் ம.ம.க எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா அவர்கள் கலந்துகொள்ள வந்திருந்தார், அது சமயம்  AYDAவின் சார்பாக அவர்களை சந்தித்து நமதூர் அரசியல் நிலை குறித்து பெரும் கவலை கொண்டு எடுத்துக் கூறப் பட்டதோடு மட்டுமல்லாமல் இருதரப்பினருக்கும் ஒற்றுமையை ஏற்படுத்த மேலிடம் முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது. அவரும் மேலிடத்துக்கு தெரியப்படுத்தி பிரச்சினையை சுமூகமாக முடிக்க ஆவன செய்வதாக ஒப்புதல் கொடுத்தார்.

சங்கை மிகு ரமலான் மாதம் நெருங்கி வரும் இவ்வேலையில் இந்த நல்ல தருனத்தில் இரு தரப்பினரும் பரஸ்பரம் பழையதை மறந்து ஒற்றுமையுடன் செயல் படவேண்டும் எனபதை அய்டாவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வேண்டுகோள்  யாருக்கும் சார்பாகவோ அல்லது  எதிராகவோ வைக்கப்பட்டது இல்லை மாறாக வெளிநாட்டில் இருக்கும் அப்பாவி அதிரை மக்களுக்கு ஊரில் உள்ள உற்றார் உரவினர் ஒற்றுமையுடனும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதற்காக வேண்டப்படும் வேண்டுகோள்.

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

ஆதாரம்: ஷஹீஹுல் புஹாரி- பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7138 

இன்ஷா அல்லாஹ்,  வல்ல இறைவன் இனி வரும் காலங்களில் நம் அனைவரையும் ஒற்றுமை என்னும் ஒருகோட்டில் நிறுத்தி நம் சமுதாயம் முன்னேற, வாழ்க்கை வளம் பெற உதவி செய்வானாக - ஆமீன்.


AYDA  JEDDAH
 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template