Friday, September 24, 2010

மூளை சுறுசுறுப்பாக செயல்பட...

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க மூளை துணைபுரிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டும் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது மூளை. அதன் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.




மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம், புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. அப்படியானால் முழு அளவு மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா?

மற்ற விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, அர்த்தமுள்ள இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான். ஒரு நொடிக்குள் பல தூண்டல்களை எதிர்கொண்டு செயல்களை செய்ய துரிதமாக இயங்குவது மூளை. மனிதர்களில் கூட நாம் பிறரில் இருந்து வேறுபட்டு இருந்தால் அது நமது மூளையை பயன்படுத்தும் ஆற்றலில்தான்.

எனவே நாம் துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமானால் மூளையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதன் சுறுசுறுப்பை அதிகரிக்க இங்கே சில டிப்ஸ்...

* மூளை சுறுசுறுப்பாக செயல்பட முதலில் அதிகாலையில் எழ வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சுப்பயிற்சி பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று செய்வது சிறந்த பலன் தரும்.

மேலும் "ட்ரெட்மில்"லில் ஓடுவது, ஜாக்கிங் செய்வது, ஓட்டம் போன்ற பயிற்சிகளை செய்தாலும் மூளையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.

* இரண்டாவதாக, சத்துள்ள சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அதே வேளையில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கண்ட கண்ட வேளைகளில் சாப்பிடுவதும், அளவை மீறிச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற உணவுமுறை மந்தத் தன்மையையும், சில வியாதிகளையும் ஏற்படுத்தும்.

* உடல் பராமரிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். நோய்கள் தாக்காத வகையில் தேவையான விழிப்புணர்வுடன் சுத்தமாக இருக்க வேண்டும். டைப் 2 நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் மூளையின் செயல்களை பாதிக்கக் கூடியவை. இவை அறிவுத்திறனை பாதித்து, கவலைகளை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க சிகரெட் மற்றும் புகைப் பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.

* அடுத்ததாக மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தேவையானது ஓய்வு. மூளைக்கு ஓய்வு என்பது தூக்கத்தில்தான் கிடைக்கிறது. எனவே வேலை, வயதுக்கு தக்கபடி போதிய அளவு தூங்கி ஓய்வெடுங்கள். சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது.

* ஒரு நாளைக்கு 2 முறை காபி அல்லது டீ குடியுங்கள். இதில் உள்ள "காபீன்" என்னும் ரசாயனப்பொருள் புத்துணர்ச்சியை தூண்டும் திறன் உடையது. குறிப்பாக மாலைநேர காபி மூளையின் செயல்பாட்டை அதிக அளவில் தூண்டுவதாக ஆய்வில் கண்டறிந்து உள்ளனர். தினசரி 4 முறைக்கு மேல் டீ பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.

* அதேபோல் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் உணவு மீன். அதில் உள்ள "ஃபேட்டி ஆசிட்", ஒமேகா 3 ஆகியவை மூளை செயல்படும் விதத்தை துரிதப்படுத்துகிறது. எனவே உணவில் மீனையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

* அறிவுத்திறனை வளர்க்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பழகுங்கள்.

* நினைவுத்திறனை அதிகப்படுத்துவதற்காக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

மேற்கண்ட வழிகளை பின்பற்றினால் மூளையில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். வெற்றி கைகளை நீட்டி தழுவிக் கொள்ளும்.





Continue Reading...

Monday, September 20, 2010

குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாமா!

அன்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குழந்தைகள் நர்சரி பள்ளிக்கு செல்லும் முன் 5000 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துவிடுகின்றனர் என்று தெரிவிக்கிறது. இது கல்லூரியில் ஓர் பட்டம் பெறுவதற்கு படிப்பதற்காக செலவிடும் நேரத்திற்கு சமமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. நம் நாட்டிலும் இதே நிலைமைதான் என்பதில் சந்தேகமில்லை. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியும் கம்ப்யூட்டரும் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க விடாமல், கம்ப்யூட்டரில் விளையாடாமல் தடுப்பது இயலுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகி விட்டது.

குழந்தைகள் அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சி பார்பதானாலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதானாலும் பல தீய விளைவுகள் உண்டாகின்றன. உடல் பருமன், சோம்பேறித்தனம், புதுவித சிந்தனை வளர்ச்சியடையாமை ஆகியவை அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் காணப்படலாம். இக்குழந்தைகளுக்கு பிறரோடு தொடர்பு கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். எனவே குறைவான நண்பர்களை பெற்றிருப்பர். விரைவிலேயே கண் பார்வை குறைபாடு ஏதேனும் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குழந்தைகளால் படிப்பில் ஆர்வத்தைக் கண்பிக்க இயலாது. பிற்காலத்தில் இவர்கள் யதார்த்த வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் துன்புறுவர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் இவை.

அதே சமயத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை முற்றிலும் பார்க்காத குழந்தைகளுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வகுப்பில், பிற இடங்களில் தன் வயதையொத்த குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் சில கதாப்பாத்திரங்களைப் பற்றியோ அல்லது கதைகளைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி பார்க்காத குழந்தைகள் எதுவும் புரியாமல் தவிக்கலாம். குழந்தைகளின் தற்போதைய பேஷன் என்னெவென்று தெரியாமலும், பயன்படுத்தும் பொருட்கள் என்னவென்று தெரியாமலும் இக்குழந்தைகள் தவிப்பர்.

குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் பல நல்ல பலன்களும் உண்டு. உதாரணமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் பேச்சுத் திறன் சிறப்பாக வளர்ச்சியடையும், அதிகமான புதிய சொற்களை விரைவாக கற்றுகொள்வர். மொழி வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். மேலும் உடையணியும் விதம், பிறரிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் சிறப்பாக இருக்கும்.

மேலும் குறிப்பிட்ட நன்மைகள் அனைத்தும் குழந்தைகள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். அதிகமான வீடுகளில் பெற்றோர் சினிமா நிகழ்ச்சிகளையும் நெடுந்தொடர்களையுமே ஓட விடுகின்றனர். அதனால் குழந்தைகளும் இவைகளையே பார்த்து பெற்றோர்களைப் போல நடந்து கொள்கின்றனர். சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை தவிர்த்து குழந்தைகள் சேனலை அதிகம் பார்க்கும்படி செய்ய வேண்டும். அதிலும் புதிய பொருட்களை உருவாக்குவது, சித்திரம் வரைவது, வாழ்த்து அட்டைகளை உருவாக்குவது, அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல் தரும் நிகழ்ச்சிகள், விலங்குகளின் வாழ்க்கையைப் பற்றிய நிகழ்ச்சிகள், பிற நாடுகள், மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய நிகழ்ச்சிகள், மற்றும் சுற்றுலா தலங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை பெற்றோர் தேர்ந்தெடுத்து குழந்தைகளை பார்க்கச் செய்ய வேண்டும். அவ்வாறு நிகழ்ச்சிகளை தினமும் குறிப்பிட்ட நேரம் பார்க்கச் செய்வது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பெற்றோர் செய்யும் உதவியாக அமையும்.

எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பது, கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது தவறு. தொலைக்காட்சியே பார்க்காமல் இருப்பதும் தவறு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை குழந்தைகளை தினமும் பார்க்கச் செய்வது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும். உங்கள் வீட்டுக்குள் வரும் உலகத்தை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுவதாக அமையும்.
Continue Reading...

Thursday, September 9, 2010

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்



உலகில் வாழும் அனைத்து அதிரை சகோதரர்களுக்கும் எங்கள் உள்ளம் கனிந்த நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துக்கள் 

அய்டா 
Continue Reading...

நோன்புப்பெருநாள் அரபிய நாடுகளில் வெள்ளிக்கிழமை

அஸ்ஸலாமு அலைக்கும்

புதன் மாலை ஷவ்வால் பிறை தென்படாதசூழலில் வியாழன் அன்று 30 ஆவது நோன்பு கடைபிடிக்கப்படும் என்றும் இன்ஷா அல்லாஹ், 10-09-2010  வெள்ளிக்கிழமை அன்று, சவூதி மற்றும் அரபு நாடுகளில் நோன்பு பெருநாள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகில் வாழும் அனைத்து அதிரை மக்களுக்கும் நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
Continue Reading...

Saturday, September 4, 2010

ஒழுங்கா பராமரிக்கிறீங்களா தலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது !

பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும், பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு.
பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:
*மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.
*குடல்: குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.
*மார்பகம்: பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.
*சிறுநீர்ப்பை: இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.
*நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு , உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.
*குரல்: தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.
*கண்: பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.
*இருதயம்: ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும் குறைகிறது.
*கல்லீரல்: இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.
*சிறுநீரகம்: ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.
*எலும்புகள்: 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.
*பற்கள்: எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.
*தசைகள்: முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.
*தோல்: தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.
*தலைமுடி: முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்; வெள்ளை முடி தோன்றும்.
Continue Reading...

Tuesday, August 31, 2010

"ஷிஃபா" மருத்துவமனைக்கு மறுமலர்ச்சி!




"நான் நோயுற்றால், அதைக் குணப்படுத்துபவன் அல்லாஹ்தான்" (26:80) என்பது, இஸ்லாத்தின் அருள்மறையாம் குர்ஆன், மனிதனை இறை வல்லமை மீது நம்பிக்கை கொள்ளச் செய்து அறிவுறுத்தும் அருள் வாக்காகும்.

"ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. சரியான மருந்தால் சிகிச்சை செய்யும்போது, அல்லாஹ் நாடினால், அந்த நோய் குணமாகும்" (சஹீஹ் முஸ்லிம்) என்பது நபிமொழியாகும். இதுவும் இஸ்லாத்தின் இனிய போதனைதான்.



கி.பி.1983 இல் பொதுநல நோக்குடன் தொடங்கப்பெற்றது நமதூரின் 'ஷிஃபா' மருத்துவமனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசு மருத்துவமனையில் இல்லாத வசதிகளுடன் உருவாயிற்று இந்த 'ஷிஃபா' மருத்துவமனை என்பதும் நாமறிந்ததே. சிறந்த மகப்பேறு பெண் மருத்துவர்கள் இங்கு முழு நேரச் சேவையில் ஈடுபட்டிருந்ததால், சுகப் பிரசவங்கள் பல நிகழ்ந்துள்ளன. (இக்கட்டுரையாளரின் மூன்று பிள்ளைகள் இம்மருத்துவ மனையில்தான் பிறந்துள்ளனர்.) பல அவசர சிகிச்சைகளும் பெற்றுச் சுகமடைந்தவர்களும் நம்மூரில் ஏராளம். சிறப்பு மருத்துவர்கள் பலர் இங்கு வருகை தந்து சிகிச்சைகளும் தந்துள்ளனர். இவ்வாறு, அரசு சாராத பொது மருத்துவமனையாகவும், சேவை மனப்பான்மையிலும் இயங்கிவந்த 'ஷிஃபா'வுக்குச் சில ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை உணரத்தான் வேண்டும்.

அதற்கான காரணங்கள் யாவை என்று ஆராய்வது, இக்கட்டுரையின் நோக்கமன்று. 'நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடக்க வேண்டியது நல்லதாக இருக்கட்டும்' என்ற எண்ணத்தில், நமதூரின் நலனில் அக்கறை கொண்ட சிலர் இம்மருத்துவமனைக்குப் புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர் என்பது ஓர் ஆறுதலான செய்தியாகும். எமது நட்பிற்குரிய அந்த நல்லுள்ளங்களின் வேண்டுகோளின்படி, நாம் ஒரு First Hand Report எடுப்பதற்காக 'ஷிஃபா'வுக்குச் சென்றோம்.

எமக்கு 'ஷிஃபா'வின் எல்லாப் பகுதிகளும் சுற்றிக் காட்டப்பட்டன. 'மாஷா அல்லாஹ்!' இதே Infrastructure வேறு ஊர்களில் இருந்தால், இன்றைக்கு இதன் நிலையே வேறாக இருந்திருக்கும். எல்லா வசதிகளும் இருந்தும், அதிரையின் மருத்துவச் சேவையில் இந்த 'ஷிஃபா'வுக்கு உரிய இடமில்லாமல் போனதற்கு என்ன காரணம்? யார் யார் காரணம்? கேள்விகளால் கவலைதான் கூடிற்று! இது ஒரு Full-fledged Hospital என்ற தகுதியில், இதன் மறுமலர்ச்சிக்கான தேவைகள் யாவை என்று ஆராய முயன்றோம்.

அப்போதுதான், இந்த மருத்துவமனைக்காக அண்மையில் பணியமர்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் டாக்டர் கோமதி MBBS, DGOஅவர்கள் 'ஷிஃபா'வுக்குள் இன்முகத்துடன் நுழைந்தார்கள். அந்நேரத்தில் அவர்களுக்கு நோயாளி ஒருவரும் இல்லாததால், நமக்கு அவர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டியது.

டாக்டர் கோமதி அவர்கள் நமதூருக்குப் புதியவர் அல்லர். 'ஷிஃபா'வில் சில ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர், சஊதி அரேபியா, யமன் போன்ற அரபு நாடுகளில் சில ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்துவிட்டுத் திரும்பி வந்துள்ளார்கள். 'ஷிஃபா'வின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் அன்பழைப்பை ஏற்று, இந்த மகப்பேறு மருத்துவர் நமதூருக்கு வந்துள்ளார்கள். டாக்டர் கோமதி அவர்களைத் தற்போதைய 'ஷிஃபா'வின் இயக்குநர்கள் மிகுந்த பொருள் செலவில் வரவழைத்து, இங்குப் பணியில் அமர்த்தியுள்ளார்கள். டாக்டர் அவர்களின் பேச்சிலிருந்து, இந்த மருத்துவமனையை முன்னேற்றம் செய்யவேண்டும் என்ற அவரின் நோக்கம் தெரிந்தது. தலைமை மருத்துவர் என்ற முறையில், டாக்டர் அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள். அவை முறையாக இதன் இயக்குநர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டன. டாக்டரின் அயல்நாட்டு அனுபவங்களின் தாக்கம், அவர்களின் பரிந்துரைகளில் வெளிப்பட்டது.

மொத்தத்தில், 'ஷிஃபா'வுக்கு ஒரு Face-lifting அவசரத் தேவை. இதனை நாம் மின்னஞ்சல் மூலம் இதன் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துவிட்டோம். அவர்களும், இவை இன்றியமையாதவை என்றே உணர்கின்றனர். அதன் அறிகுறி, இப்போதே தென்படுகின்றது. அதாவது, எம் பரிந்துரைகளுள் சில இப்போதே செயலுருப் பெறத் தொடங்கியுள்ளன. மருத்துவ உபகரணங்கள் பழுது பார்க்கப்பட்டுப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த MBBS பெண் மருத்துவர் (GP) ஒருவரும் அண்மையில் பணியமர்வு பெற்றுள்ளார். உள்ளூர் டாக்டர்களுள், டாக்டர் ஹகீம் MBBS, DA அவர்கள் தொடக்க காலம் முதல் 'ஷிஃபா'வுடன் ஏற்படுத்திக்கொண்ட சேவைத் தொடர்பு பாராட்டத் தக்கதாகும்.

மகப்பேறு சிறப்பு மருத்துவருடன் சில பரிந்துரைகளில் நாமும் ஒத்த கருத்தில் உடன்பட்டோம். அவற்றுள் ஒன்று, நன்கு பயிற்சி பெற்ற 'நர்ஸ்'கள் மிகத் தேவை என்பதாகும். சரியான பணியுடை (Uniform) அணிந்து, முறையாக அவர்கள் சேவை செய்யும்போது, நோயாளிகளுக்கு ஓர் ஆறுதல் உண்டாகின்றது.

குழந்தை நல மருத்துவர் ஒருவரின் தேவை பற்றியும் 'ஷிஃபா'வின் இயக்குநர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு, உடனடியாக, உள்ளூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை on call basis பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகின்றது. தற்போது வருகை தரும் பல் மற்றும் 'ஹோமியோபதி' மருத்துவர்களின் சேவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கின்றது.

மருத்துமனையின் உள்ளும் புறமும் பல சீர்திருத்தங்களால் மிளிரப் போகின்றன, மிக விரைவில். நாம் வழங்கிய பரிந்துரைகளுள், கீழ்க்கண்டவை Long term projects என்ற அடிப்படையில், 'ஷிஃபா'வின் இயக்குநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன:



· 'ஷிஃபா'வின் சுற்றுச் சுவருக்குள், இங்கே பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான வீட்டு வசதி செய்து கொடுத்தல்.

· புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கட்டட வசதி செய்தல்.

· 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்யப் போதுமான வருமானம் தரும் துறைகளைத் தொடங்குதல்.

· ஏழைகள் மற்றும் வசதியற்றவர்களின் சிகிச்சைகளுக்காகப் பொறுப்பேற்கும் நல்லுள்ளம் கொண்டவர்களை நியமித்தல்.

· வருகையாளர்களின் வசதிக்காகப் பள்ளிவாசல் கட்டுவது.



தற்போதைய நிர்வாகிகளாகப் பட்டதாரிகள் இருவர் பணி புரிகின்றனர் என்ற செய்தி, கடந்த கால illiterate நிர்வாகிகளால் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும்.

இந்த மருத்துவமனை தொடங்க இருந்த கால கட்டத்தில், நமதூரின் தலைவர்களுள் ஒருவர் தொலைநோக்கோடு ஒரு பரிந்துரை செய்தாராம். அதாவது, இந்த 'ஷிஃபா' மருத்துவமனையைத் தஞ்சாவூரில் கட்டினால் நல்லதல்லவா? நம்மூர் மக்கள் வந்து தங்கித் தமக்குப் பிடித்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெறுவார்களே. அதனால் பல டாக்டர்களின் தொடர்பு ஏற்படுமே என்பதெல்லாம் அப்பெரியவரின் ஆலோசனையாம். ஆனால், நம்மூர் மக்கள் வெளியூர்களுக்குப் போய் சிரமங்களை ஏற்கக் கூடாது; செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றெல்லாம் கருத்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு, மர்ஹூம் AMS முதலியவர்களால் இந்த மருத்துவமனை தொடங்கப் பெற்றதாம்.

அத்தகையோரின் நல்ல நோக்கங்கள் நிறைவேற நாமெல்லாம் பங்களிப்புச் செய்ய வேண்டாமா? எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்றும், 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்வதற்கு, இதன் வருமானத்தைப் பெருக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் என்றும் கருத்திடுங்களேன், பார்ப்போம்!



ஆக்கம்: அதிரை அஹ்மது

Continue Reading...

Wednesday, August 18, 2010

ஜித்தாவில் நடந்த இப்தார் நிகழ்ச்சி







.











ஜித்தாவில் அய்டாவின் சார்பில், 17-08-2010 செவ்வாய்க்கிழமை  அன்று இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது அது சமயம் பெரும்பாலான அதிரை சகோதரர்களும் சகோதரிகளும் குடும்பத்துடன் திரளாக  கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்,

சிறுமி நூருல் சபீலா க்ராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது, சகோ. ஜபருல்லாஹ் அவர்கள்  நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசினார், சகோ. சாகுல் ஹமீது அவர்கள் ரமலானின் முக்கிய கடமைகள் மற்றும் சிறப்புகள் பற்றி திருகுர்ஆன் ஆதாரத்துடன் விளக்கி பேசினார், சகோ. ரஃபியா  நிகழ்ச்சியை தலைமை ஏற்று தொகுத்து வழங்கியதுடன், அய்டாவின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளித்தார், சகோ. அப்துல் அஜீஸ் நன்றி நவிழ, இரவு சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்டா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்
Continue Reading...
 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template