Thursday, July 22, 2010

ஜமாலின் பிரிக்கப்படாத கடிதம்...!

ஜமால்...

தமிழகத்தின் ஒரு கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்ட ஒரு ஊரில் பிறந்த இளைஞன், குடும்ப சூழலால் 10ஆம் வகுப்புக்கு மேல் தொடர முடியாமல் தன் வீட்டை அடமானம் வைத்து சவுதிக்கு புறப்படுகிறான்

ஆனால் சவூதி வந்த பிறகுதான் தெரிகிறது கொஞ்சமாவாது படித்தால்தான் நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்கும் என்று, எனவே ஓரளவு செலவு செய்த தொகையை சம்பாதித்துக்கொண்டு தாயகம் திரும்பிவிடலாம் என தீர்மானிக்கிறான் 5 வருடங்கள் சவுதியிலேயே கழிகிறது

இப்பொழுது தன் பெற்றோருக்கு கடிதம் ஒன்று எழுதுகிறான் ஜமால்.அதில் தன் சவுதியை முடித்துக்கொண்டு ஊர் வருவதாக கூறியிருந்தான்,

அதற்கு அவன் வாப்பா எழுதும் பதில் கடிதத்தில்

“அன்புள்ள மகன் ஜமாலுக்கு இங்கு நான் உன் உம்மா தங்கை அனைவரும் நலம் அதுபோல் உன் நலம் மற்றும் உன் நன்பர்கள் நலம் அரிய ஆவல். நீ ஊர் வருவதாக எழுதி இருந்தாய் ரொம்ப சந்தோஷம் உன்னை காண நாங்கள் ஆவலாய் இருக்கிறோம் ஆனால் உன் உம்மா எதோ எழுத வேண்டுமாம்”

அதோடு ஜமாலின் உம்மா எழுதும் வார்த்தைகள் தொடர்கின்றது
“மகன் ஜமாலுக்கு நான் இங்கு நலம் உன் நலம் அறிய ஆவல், நீ சவுதியை முடித்துக்கொண்டு ஊர் வருவதாக எழுதியிருந்தாய்,ஒருபுறம் நம் வீட்டில் உள்ள எல்லோருக்கும் சந்தோசம் என்றாலும், நாம் குடியிருக்கும் வீடு பழைய வீடு, இன்றோ நாளையோ இடிந்து விழும் அளவில் உள்ளது. அதை இடித்துவிட்டு சிறிதாக நாம் தாங்கும் அளவில் ஒரு வீடு கட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இந்த குடும்ப சுமைகளை சுமந்து கொண்டிருப்பவன் நீதான் ஆகவே இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்து நம் வீட்டையும் கட்டிவிட்டால் பின்பு நீ இங்கு வந்துவிடலாம். உன் சாதகமான பதிலை எதிர்பார்க்கும்
உன் உம்மா.”

கடிதத்தை படித்த ஜமால் ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் பயணத்தை ரத்து செய்கிறான்.
வருடங்கள் கழிகின்றன அவன் தாய் நினைத்தபடி ஒருவழியாய் கஷ்டப்பட்டு வீடும் கட்டி முடித்தாகிவிட்டது, இப்பொழுது எப்படியும் நாடு திரும்பிவிடவேண்டும் என தீர்மானித்து தன் வீட்டிற்கு தெரியப்படுத்துகிறான்.

மீண்டும் பதில் வருகிறது ஜமாலின் பெற்றோரிடமிருந்து,

“அன்புள்ள ஜமாலுக்கு................ நீ ஊர் வருவதால் நாம் எல்லோரும் சந்தோசம் அடைவோம். ஆனால் நமக்கு மற்றுமொரு கடமை பாக்கி இருக்கிறது அது உன் தங்கை , அவள் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள், அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பது நம் கடமை ஆகவே அந்த பொறுப்பு உன்னிடம்தான் உள்ளது எனவே அதை சிந்தித்து ஊர் வரும் முடிவை தள்ளிப்போடுவது நல்லது”.

மீண்டும் ஜமாலின் பயணம் ரத்து, தன் தங்கைக்காக பொருள் பணம் சேர்க்கிறான் ஜமால், அவன் தங்கைக்கு நல்ல இடம் அமைவதாகவும் உடன் விடுமுறையில் ஊர் வரவேண்டும் என அவனுக்கு கடிதம் வருகிறது உடன் தன் நண்பர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு புறப்படுகிறான் ஜமால் மேலும் ஊரிலும் கடன் வாங்கி அவன் தங்கையின் திருமணமும் ஜமாலின்
திருமணமும் ஒரே நாள் நடக்கிறது. விடுமுறை முடிந்து சவூதி திரும்புகிறான் ஜமால்.

திருமண கடன் எல்லாம் முடிகிறது இதற்கிடையில் ஜமாலுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இப்பொழுது ஊர் ஞாபகம் அவனை வாட்டுகிறது இப்பொழுதாவது ஊரில் செட்டில் ஆகவேண்டும் என தீர்மானிக்கிறான், இப்பொழுதும் ஒரு கடிதம் வருகிறது அனால் அக்கடிதம் அவன் பெற்றோரிடமிருந்தல்ல, அக்கடிதம் வந்தது அவன் மனைவியிடமிருந்து.

“அன்புள்ள கணவருக்கு..................... நீங்கள் ஊர் வரும் செய்தி அறிந்தேன் இத்தனை நாள் சம்பாதித்து உங்களுக்கென்று ஒன்றும் சேர்க்கவில்லை இப்பொழுது நமக்கு ஒரு குழந்தையும் ஆகிவிட்டது இப்பொழுது ஊர் வந்து நம் குடும்பத்திற்கு வழி என்ன இருக்கிறது நம் குழந்தையின் எதிர் காலத்தை மனதில் கொண்டு நீங்கள் அங்கேயே தொடர்வது நல்லது”.

ஜமாலின் சவூதி வாழ்க்கை மீண்டும் தொடர்கிறது இதற்கிடையில் ஒவ்வொரு முறையும், விடுமுறை நாட்கள் (vacation) குறைந்த நாட்களே அவன் வேலை செய்யும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. அவன் வயதும் இளமையும் சவுதியிலேயே கழிகிறது.
ஜமாலின் மகனும் வளர்கிறான், வருடங்கள் கடந்து போகின்றன.
+2 முடித்து மேற்படிப்புக்கு தயாராகிறான் ஜமாலின் மகன்.

இப்பொழுது ஜமாலின் மகனிடமிருந்து ஒரு கடிதம், அதில் , “அன்புள்ள வாப்பாவுக்கு................... நான் +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்து இருக்கிறேன் எனவே எனக்கு என்ஜினியரிங் படிக்க விருப்பமாய் உள்ளது உங்கள் சம்மதத்தை எதிர்பார்கிறேன்”.

கடிதத்தை படித்த ஜமால் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற விழைகிறான்

உழைக்கிறான் தன் குடும்பத்திற்காக, மகனின் என்ஜினியரிங் படிப்பும் முடிகிறது ஜமாலின் மகனுக்கு இந்தியாவிலேயே வேலையும் கிடைக்கிறது.
இப்பொழுது தீர்மானமாய் முடிவெடுத்துவிட்டான் ஜமால் சவுதிக்கு விடை கொடுப்பது என்று.
தன் பணிபுரிந்த நிறுவனம் மற்றும் தன் நண்பர்களின் பிரிவுபச்சரத்தோடு விமானத்தில் ஜமால்.

ஒவ்வொரு முறை விடுமுறையில் ஊருக்கு செல்லும்போதும் அவன் பெட்டியில் வீட்டுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான் நிறைய சாமான்கள், அனால் இப்பொழுது அவன் பெட்டியில் நிறைய மருந்து மாத்திரைகள். ஆம், இத்தனை ஆண்டு வெளிநாட்டு வாழ்கையில் அவனுக்கென்று அவன் சம்பாதித்தது சர்க்கரை நோயும், இரத்தக்கொதிப்பு நோயும், கிட்னியில் கல்லும்தான் உடல் சோர்ந்து முடிகள் நரைத்து தாயகம் திரும்புகிறான் ஜமால்

இப்பொழுதும் அவன் சட்டைப்பையில் அவன் வீட்டிலிருந்து வந்த ஒரு கடிதம்.

ஆனால் அதை அவன் பிரித்து படிக்கவேயில்லை.

0 comments:

Post a Comment

 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template