Saturday, July 24, 2010

வேண்டாமே இந்த குறுக்கு வழி .

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

போலி மதிப்பெண் சான்றிதழ்களை அரசு ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையேல் நல்ல மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பல மாணவர்களின் பெற்றோர், போலி சான்றிதழ்கள் என தெரிந்தே வாங்கியுள்ளனர். பெற்றோரின் குறுக்குவழியால், விஷயம் தெரியாமலே சில மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொறியியல் கவுன்சிலிங்கைப் போல, மருத்துவக் கவுன்சிலிங்கிலும் 10 மாணவர்கள், போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பிடிபட்டுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர், பிளஸ் 2வில் 80 சதவீத மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். ஆனால், மருத்துவப் படிப்பில் சேர ஆசைப்பட்டும், பொறியியலில் முன்னணி கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேரவும் இந்த குறுக்கு வழியை முயற்சித்துள்ளனர். இதனால், மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. மருத்துவம், பொறியியல் என எந்தவொரு உயர் கல்வி பெறுவதற்கும் பிளஸ் 2 மதிப்பெண்ணே முக்கியம். பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களின் மதிப்பெண் மிக முக்கியத்துவம் பெறுகிறது.பிளஸ் 2 பொதுத் தேர்வில் இந்த பாடங்களில் அதிக மதிப்பெண்ணைப் பெறாத மாணவர்கள், விடைத்தாள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கின்றனர். தமிழகத்தின் அரசு தேர்வுத் துறையில் விடைத்தாள் மறு மதிப்பீடு மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படுவதால் அதில் மதிப்பெண் மாற்றம் பெறுவது என்பது சிரமம்.அதனால் மாணவர்கள் சிலர் முக்கியப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக குறுக்கு வழியைப் பின்பற்றுகின்றனர். அவர்களால் இரவு, பகல் பாராமல் உண்மையிலேயே கடினப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர், ஆசிரியர்கள் கூறுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவதாலும், அதில் ஏராளமான பேர் வேலை செய்வதாலும் போலிச் சான்றிதழ்கள் குறிப்பாக மதிப்பெண் சான்றிதழ்கள் பற்றி ஓரளவுக்குக் கண்டுபிடிக்க முடிகிறது. மற்றவற்றில் அப்படி இருக்குமா என்று சொல்வதற்கில்லை' சட்டப் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவற்றில் தொழில்நுட்பத் திறமையோ, தேவையான ஆள்களோ இல்லை என்றும் இவற்றில் பெரும்பாலும் மாணவர்கள் அளிக்கும் மதிப்பெண் சான்றிதழைத்தான் பெரிதாக நம்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது.தங்கள் பிள்ளைகள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்தால் போதும் என்று எதையும் அடகு வைக்கவும், கடன் பெறவும் தயாராகும் கணிசமான பெற்றோர்களுக்கு, பணம் கொடுத்து போலி மதிப்பெண் சான்றிதழ் பெறுவது பெரிய தவறாகத் தெரிவதில்லை.இது போன்ற செயல்களால் மாணவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர் சமுதாயத்துக்கும், லட்சக்கணக்கான மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி, விடைத்தாள்களைத் திருத்தி, தேர்வு முடிவுகளை வெளியிடும் அரசு தேர்வுத் துறைக்கும், அதற்கு செலவழிக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் மிகப் பெரிய இழுக்கு ஏற்படும். போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களால் நாட்டுக்கு எப்படி நல்லது நடக்கும்.அடையாளம் காண்பது கடினம்: அரசு அதிகாரி ஒருவர் கூறியது:பி.இ., மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போலி மற்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களுக்கு இடையே வேறுபாடு பெரிதாக இல்லை. காகிதத்தின் கனம், அதில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துகளின் அளவு, அதிகாரியின் கையெழுத்து என எல்லாமே ஒன்றாகவே இருக்கின்றன. அப்படியிருக்கும்போது அதில் அசல் எது? போலி எது? என்பதை சாதாரணமானவர்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும்' என்றார்.எனவே, மாணவர் நலனைக் காக்கவும், நாட்டின் நலனைக் காக்கவும் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்; காவல் துறையும் தனது பங்கை அளிக்க வேண்டும். பெற்றோரும், மாணவர்களும் இது போன்ற குறுக்கு வழியை கையாலாமல் நேர்மையான வழியில்தான் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

அதிரை - சர்புதீன்

1 comments:

அதிரை தும்பி on July 25, 2010 at 8:16 AM said...

வாழ்த்துக்கள்..

Post a Comment

 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template