Wednesday, July 28, 2010

குழந்தையைக் கொன்று ரத்தத்தைக் குடித்து..


யாரோ மூடர்கள் சொன்னதை நம்பி, பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையைக் கடத்தி... நரபலி கொடுத்து, ரத்தத்தைக் குடித்து... தலை வேறு உடல் வேறாகத் துண்டித்து, தூக்குவாளியில் கொண்டு சென்று வெவ்வேறு ஊர்களில் புதைத்து... அப்பப்பா அந்தக் கொடூரன் செய்த பயங்கரத்தை விவரிக்கும்போதே குலை நடுங்குகிறது!

மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சிரின் பாத்திமா. அவர் கணவர் திடீரென இறந்து போனதால் நிம்மதி வேண்டி, ஒண்ணரை வயதேயான மகன் காதர் யூசுப்புடன் மதுரை கோரிப்பாளையம் தர்காவில் தங்கி இருந்தார். நரபலி கொடுக்க தலைப்பிள்ளை தேடி ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருந்த மந்திரவாதி அப்துல் கபூர், கடந்த 20 நாட்களுக்கு முன் இதே தர்காவுக்கு வந்தான். அங்கிருந்த பிஞ்சைக் கொன்றுதான் இந்த பஞ்சமா பாதகத்தைச் செய்திருக்கிறான் அந்தக் கொடூரன்!
தனக்கென ஆதரவாக இருந்த ஒரு குழந்தையையும் இப்படி அநியாயமாக அள்ளிக் கொடுத்த துக்கத்தில் துவண்டு கிடந்தார் சிரின் பாத்திமா. அவரை ஆறுதல் படுத்திப் பேச வைத்தோம்.

'என் வீட்டுக்காரர் கவுகர் பாட்ஷா கொத்தனார் வேலை செய்தார். நாலு மாசத்துக்கு
முந்தி ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டார். அந்த துக்கத்தை மறக்கமுடியாம மன நிம்மதிக்காக கோரிப்பாளையம் தர்காவில் தங்கியிருந்தேன். 2-ம் தேதி காலை 4 மணிக்கு எழுந்தப்ப பக்கத்துல படுத்திருந்த குழந்தைக்கு குளிருமேனு போர்வையால் போர்த்திட்டு மறுபடியும் படுத்தேன். ஒரு மணி நேரம் கழிச்சு, பாங்கு சொன்னாங்க. அப்ப எந்திரிச்சுப் பார்த்தா குழந்தையைக் காணோம். பதறிப்போயி தேடுனேன்...' என்று சொல்லிவிட்டுக் கதறியவர், 'நான் அங்கு தங்கி இருந்தப்பதான் அப்துல் கபூர் என் குழந்தையை எடுத்துக் கொஞ்சினான். குடும்பத்தைப் பத்தி அக்கறையா விசாரிச்சான். அந்தப் பாவி இப்படிப் பண்ணுவான்னு நினைச்சுக்கூட பார்க்கலையே...' என்றார்.

கோரிப்பாளையம் தர்கா டிரஸ்ட்டி பாஷல் பாட்ஷா, 'இந்த தர்காவுக்கு யார் வந்தாலும் அவர்களின் முழு முகவரியையும் பெற்றுக்கொண்டுதான் தங்குவதற்கு அனுமதி கொடுப்போம். கடந்த 30-ம் தேதி அப்துல் கபூர் ஒரு பெண்ணுடன் இங்கு வந்தான். தன் மனைவிக்கு கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷன் ஆகிவிடுவதாகவும், இங்கு 41 நாள் தங்குவதற்கு தனக்கு உத்தரவு வந்திருப்பதாகவும் சொல்லி அனுமதி கேட்டான். நாங்களும் அனுமதி கொடுத்தோம். ஆனால், குழந்தை காணாமல்போன அன்றே அவங்க இரண்டு பேரையும் காணவில்லை...'' என்றார்.
குழந்தையின் சித்தப்பா சாதிக் பாட்ஷாவை சந்தித்தோம். 'அப்துல் கபூர் மீது ஆரம்பத்துலேயே சந்தேகம் இருந்துச்சு. அவன் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்ததால, அவன் கொடுத்த அட்ரஸ்படி காயல்பட்டினத்துக்குப் போனோம். அங்கிருந்தவங்க எங்களோட பேசுறதுக்கே தயங்குனாங்க. அந்த ஊர் இமாம் சொன்னதும்தான்... அப்துல் கபூரைப் பற்றி அந்த ஊர்ப் பெண்கள் கதை கதையா சொல்ல ஆரம்பிச்சாங்க. 'அவன் ஒரு அயோக்கியன். சொந்த வீட்லேயே திருடியவன். எங்க வீட்லயும் கைவரிசை காட்டி இருக்கான். தன் சொந்தப் பிள்ளையையே பணத்துக்காக வித்தவன். தன் நகை, பணத்தை எல்லாம் கொடுத்து அந்தப் பிள்ளையை மீட்ட அவனோட முதல் மனைவி விவாகரத்து வாங்கிட்டுப் போய்ட்டா. பெண்கள் விஷயத்திலும் ரொம்ப மோசமான ஆளு. வருடத்துல ஒரு மாதம்கூட வீடு தங்க மாட்டான். அவன் ஊருக்குள்ள வந்தாலே நாங்க கதவைப் பூட்டிக்கிருவோம். கிட்டத்தட்ட அவன் ஒரு சைக்கோதான்'னு அவங்க சொன்ன விவரங்களை மதுரைக்கு வந்து போலீஸ்கிட்ட சொன்னேன். போலீஸைக் கூட்டிட்டு கன்னியாகுமரி, முத்துப்பேட்டை, நாகூர், திருச்சி, சேலம்னு 15 ஊர்களில் உள்ள தர்காக்களில் அவனைத் தேடினோம். கிடைக்கலை. கடைசியில், நாங்க போகாத காயல்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி தர்காவுலதான் போலீஸ் அவனை பிடிச்சிருக்கு!'' என்றார்.

மதுரை தல்லாகுளம் போலீஸாரிடம் கேட்டபோது, '22-ம் தேதி காயல்பட்டினத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர், சாதிக் பாட்சாவுக்கு போன் போட்டு, 'அப்துல் கபூர் ஊருக்கு வந்திருக்கிறான். உடனே வந்தா குழந்தையை மீட்டுடலாம்'னு சொன்னாங்க. உடனே அங்கே போனோம். அப்போ இரவு 8 மணி. 'அடடா...

கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கக் கூடாதா? அவன் போய்ட்டானே'னு சொன்னாங்க. எங்கே போனான்னு விசாரிச்சப்ப, கல்லாமொழி தர்காவுக்கு போயிருக்கிறதா தெரிஞ்சுது. நாங்க ராத்திரி 11 மணிக்கு அங்க போயி சத்தம் போடாமல் மெதுவா ஆளைத் தேடினோம். தர்காவுக்கு பின்னால் இருந்த கடற்கரை பாதையில் அவன் ஒரு பெண்ணுடன் படுத்திருந்தான். அவனைப் பிடித்து, 'மரியாதையா குழந் தையைக் கொடுத்துரு'ன்னு மிரட்டினோம். கல்லு மாதிரி நின்னான். கடைசியில் குழந்தையை நரபலி கொடுத்துட்டதா சொல்லி திகில் கிளப்பிட்டான். குழந்தையின் தலையைப் புதைத்த இடத்துக்கு பக்கத்துலதான் அவங்க ரெண்டு பேரும் பயமில்லாம படுத்துருந்தாங்க...' என்றார்கள்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸாரோ, 'கைக் குழந்தையோட வந்த அப்துல் கபூர், ஏரலில் ஒரு லாட்ஜில் மூணு நாள் தங்குறதுக்கு ரூம் எடுத்திருக்கான். அங்க வெச்சுத்தான் குழந்தையை நரபலி கொடுத்திருக்கான். கழுத்தை அறுத்து ரத்தத்தை கணவனும் மனைவியும் குடிச் சிருக்காங்க. அப்புறம் தலையைத் துண்டிச்சு, அதை ஒரு தூக்குவாளியிலும், உடலை மற்றொரு தூக்குவாளியிலும் எடுத்துட்டு கல்லாமொழி தர்கா அருகே உள்ள ஆளில்லாத குடிசையில் ஏதோ பூஜை நடத்தியிருக்கான். பின்பு தர்கா, கடல், சூரியன் மூணும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி ஒரு இடத்தைத் தேர்வு செஞ்சு, அந்த இடத்துல பூஜை செய்திருக்கான். பூஜை முடிஞ்சதும் மற்றொரு தூக்குவாளியில் உடலை கொண்டுபோய் ஏர்வாடியில் வெச்சு பூஜை செஞ்சுட்டு அங்கயே புதைச்சிருக்கான்...' என்கிறார்கள்.

குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட வீடு, ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே காட்டுப்பள்ளி பகுதியில் உள்ளது. அந்த வீட்டை கடந்த மாதம் 20-ம் தேதி வாக்கில் அப்துல் கபூர் வாடகைக்குக் கேட்டிருக்கிறான். தர முடியாது என்று சொல்லியும், ஒரே ஒரு மாதம்தான் என்று கெஞ்சி வாடகைக்கு எடுத்திருக்கிறான். தளம் இல்லாத வீடு என்பதால் உள்ளேயே தோண்டி குழந்தையை புதைக்க ஏதுவாக அமைந்துவிட்டது.

அப்துல் கபூர் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், 'ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்தபோது, கணவனை இழந்த ரமலாபீவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்தோம். அவளுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லை. நான் எவ்வளவோ மாந்திரீகம் செய்தும் குழந்தையும் தங்கவில்லை. தலைக் குழந்தையை கொன்று நரபலி கொடுத்து அதன் உதிரத்தைக் குடித்து இப்படி எல்லாம் செய்தால், எனக்கும் மந்திர சக்தி அதிகரிக்கும். மனைவிக்கும் மனநிலை சரியாகி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்னு சொன்னார்கள். அதனால்தான் அப்படிச் செய்தேன்!' என்று அசராமல் சொல்லி இருக்கிறான்.

நன்றி,
ஜூனியர் விகடன்

0 comments:

Post a Comment

 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template